ஏனைய இடைநிலை வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்த முக்கிய தீர்மானம் அடுத்த வாரம்..!

தரம் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல், கணிசமான மேல் வகுப்பு மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொவிட் பரவல் காரணமாக ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் 10, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று(08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவதன் முதற் கட்டமாக 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. அதன் இரண்டாவது கட்டமாக, அனைத்து ஆரம்ப பிரிவு வகுப்புகளையும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்தது. அதன் மூன்றாம் கட்டமாக பாடசாலைகள் மீள ஆரம்பமாகிய நிலையில் மேல் வகுப்பு கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இருப்பினும், 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்கள் குழுக்களாகவே பாடசாலைக்கு அழைக்கப் படுகின்றார்கள். அதன்படி, ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை 20க்கு மேல் இருந்தால், அந்த மாணவர்களை இரண்டு குழுக்களாக பாடசாலைக்கு அழைக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் இருந்தால், அவர்களை மூன்று குழுக்களாக பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.