கிளிநொச்சி பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை – அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிற்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார். இன்றைய தினமும் பாடசாலைகள் வழமைக்கு முன்னராக நிறைவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தில் 57 நபர்களைக் கொண்ட 27 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் ஒரு சில குடும்பங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களிற்கான உடனடி உலருணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது உள்ள காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இன்றைய தினம் பாடசாலைகள் நடைபெற்ற போதிலும் அவர்களை நேர காலத்தோடு வீடுகளிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தோம்.


அதேவேளை நாளைய தினம் பாடசாலைகளை நிறுத்துமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம். மேற்கொண்டு காலநிலையை அவதானித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவும் எண்ணியிருக்கின்றோம்.

பொதுவாக அனர்த்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினால் பிரதேச செயலகங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன், குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கௌதாரிமுனை பாடசாலைக்கு செல்வதற்கு காணப்படும் வீதி மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. அந்த வீதியை ஓரளவு போக்குவரத்து செய்யக் கூடிய வகையில் அமைப்பதற்கான நடவடிக்கை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


ஆயினும், பலத்த மழை காரணமாக அந்த வீதி செயலிழந்து காணப்படுகின்றது. அதனால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் உள்ளிட்டோர் பாதிப்புறுகின்ற நிலைதான் காணப்படுகின்றது.

திருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு மழை இல்லாது இருக்க வேண்டும் என்பதுடன், அதற்கான சிறந்த திட்டமும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அதற்காக முயற்சித்து வருகின்றோம்.

அதேவேளை அண்மையில் ஆசிரியர்கள் செல்வதற்கு பிரதேச செயலகத்தினால் விசேட ஒழுங்குகளும் செய்யப்பட்டது. அதற்கு மேலாக நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தவதற்கும் உத்தேசித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.