ஆசிரியர்-அதிபர்களின் வேதன பிரச்சினைக்கான தீர்வு; பசில் வழங்கிய உறுதி மொழி..!

சுபோதினி அறிக்கையின் ஊடாக வழங்கப்படவிருந்த ஆசிரியர் மற்றும் அதிபர்களின் வேதன பிரச்சினைக்கான கொடுப்பனவினை மூன்று கட்டங்களுக்குள் இல்லாமல், ஒரே நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


இதன்படி இந்த வேதனக் கொடுப்பனவுகள் எதிர்வரும் 2022 ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்பட இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இந்த தீர்மானம் தொடர்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற் சங்கங்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதேவேளை சுபோதினி குழுவின் முழுமையான அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை கிடைக்கும் வரை எமது தொழிற் சங்க போராட்டம் ஓயாது எனவும் இது தற்காலிக தீர்வு, இதனை தற்போது ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுபோதினி குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் 1/3இனையே அரசு தற்போது வழங்க முன்வந்துள்ளது என்பதுடன் இது அதிபர்-ஆசிரியர்களின் 24வருட முரண்பாட்டுப் பிரச்சினை என்பதும் குறிப்பிடத்தக்கது.