வவுனியாவில் ஆரம்பப் பிரிவு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் கோவிட் தொற்று உறுதி..!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கும், ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து குறித்த ஆசிரியர் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே அவருக்கு இன்று (10.11) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங் காண்பதற்கும் சுகாதரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


வவுனியாவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை மூன்று ஆசிரியர்களுக்கும், 8 மாணவர்களுக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.