அரச ஊழியர்களால் நாட்டிற்கு பெரும் சுமை; சம்பளத்தை தற்போது அதிகரிக்க முடியாது – நிதியமைச்சர் பஷில்

அரச சேவையாளர்களின் சம்பளத்தையும்,சேவையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க முடியாது. அரச சேவையாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் மக்களிடமிருந்து அதிக வரி அறவிட வேண்டும்.

அதனை எம்மால் செய்ய முடியாது என்பதனாலேயே 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவில்லை.

அரச சேவையாளர்கள் நாட்டு சுமை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.


2019ஆம் ஆண்டுக்கு பிறகு அரச சேவையாளர்களின் எண்ணிக்கை விரிவு படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கும் கிடையாது.

தற்போது 13 பேருக்கு ஒரு அரச சேவையாளர் என்ற மட்டத்தில் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களின் சம்பளத்தை இனிவரும் காலங்களிலும் அதிகரிக்க முடியாது அவர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் மக்கள் மீது அதிக வரிசுமையை விதிக்க வேண்டும அதனை எம்மால் செய்ய முடியாது


அதன் காரணமாகவே அரச சேவையாளர்களின் சம்பளத்தை வரவு- செலவு திட்டத்தில் அதிகரிக்கவில்லை அரச சேவையாளர்களுக்கு மாற்று வழி முறைகளில் நிவாரணம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் 1947ஆம் ஆண்டு கால கட்டத்திலிருந்து காணப்படுகிறது. ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கங்களும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.


பொருட்களின் விலை கட்டுப்பாட்டு விடயத்தில் நேரடியாக தலையிட முடியாது. தேசிய உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே பொருட்களின் விலை குறைவடையும் மறுபுறம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்கும் வகையில் அப்பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12 ) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.