அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை; பசில் உறுதி – டலஸ் விளக்கம்

அரச துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாது என நிதி அமைச்சர் தெரிவித்ததாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரச சேவையாளர்கள், அரச அதிகாரிகளையும் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் கூறவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தற்போதைய அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து அரசாங்கமும் பாரிய தவறொன்றை செய்துள்ளது. அதன்படி, அரசில் தீர்மானமொன்றை எடுத்துக் கொண்டு தங்களுடைய வாக்குகளுக்காக அரச சேவை நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, எங்களுடைய அமைச்சின் கீழுள்ள ஒரு நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு சுயமாக ஓய்வு பெறும் முறையொன்றை முன்வைத்து 600 பேர் ஓய்வுபெற்றுச் சென்றனர். ஆனால், 2021ஆம் ஆண்டு அதே 600 பேர், அமைச்சர்மார் அல்லது அரசாங்கத்தினால் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அரசாங்கமும் அமைச்சர்களும் அரச சேவைகளை நிரப்புவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளே இதற்கு காரணம். இதனால் அரச நிறுவனங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சுமையினையே நிதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.


முற்றாக, அரச சேவை மற்றும் அரச அதிகாரிகள் நாட்டுக்கு சுமை என்று அவர் கூறவில்லை. இதேவேளை, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதே இந்த வரவு – செலவுத் திட்டத்தினால் தீர்க்கப்பட வேண்டியிருந்த பாரிய பிரச்சினையாக இருந்தது.

இருப்பினும் இது சம்பள உயர்வல்ல. 20 வருடங்களுக்கு மேலாக இருந்த சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கே முன்மொழியப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வை வழங்க முடிந்தால் அது சிறந்த விடயமாகும்.


ஆனால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 24 வருடமாக காணப்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டியிருந்தது.

ஆகவே, அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு விருப்பம் இருந்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு முடியாத விடயம் என்பதை கடந்த வாரத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.