ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா – சிவப்பு வலயமாக மாறியுள்ள அநுராதபுரம்..!

அநுராதபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அநுராதபுரம் கொரோனா சிவப்பு வலயமாக மாறியுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கொரோனா நோயாளிகளாக மாறியுள்ளனர்.

அத்துடன் அனுராதபுரம் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஏனைய நாட்களை விட தற்போது அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.


கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் அனுராதபுரம் நகரில் நான்கு பேர் உயிரிழந்தனர் எனவும் ரோஹன பண்டார குறிப்பிட்டுள்ளார்.

நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் கேள்வி ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே ரோஹன பண்டார இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.


அனுராதபுரத்தல் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுவது குறைக்கப் பட்டுள்ளதால், பரிசோதனைகளை அதிகரிக்குமாறு கோருகிறேன். தடுப்பூசிகளுக்கு மாத்திரம் வரையறுத்து பணியாற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் எனவும் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சமல் ராஜபக்ச, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறியுள்ளார்.