ஈழத்து மூத்த முற்போக்கு இடதுசாரி எழுத்தாளர் செ.க காலமானார்..!

ஈழத்துத் தமிழ் எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர் செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடதுசாரி கருத்து நிலையின் நிலை பேறாக்கத்துக்கு தடம் அமைத்தது எனலாம். குறிப்பாக 1950, 60களில் முற்போக்கு இலக்கிய இயக்க வழிவந்தோர்களில் செ.க. மாத்திரமே தனக்கான தடங்களை ஆழமாகவும் அகலமாகவும் நிகழ்த்தியுள்ளார்.

இவற்றின் மட்டுப்பாடான அழகியல் அரசியல் ஒருபுறமிருந்தாலும் தொடர்ந்த வாசிப்பு, தேடல், படைப்பாக்க முயற்சி, நூலாக்கம் போன்றவை சந்தேகத்துக்குரியவை அல்ல. செ.க. விடம் இழையோடும் சமூக சிந்தனையும் அனைத்தையும் முன்னோக்கி நகர்த்தும் தீவிரமும் இவரது பலமும் பலவீனமும் எனக் கூறலாம்.


சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என விரிந்த பல்வேறு களங்களில் தொடர்ந்து இயங்கும் ஆற்றல் கொண்டவர் இவர் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் மட்டுமின்றி தமிழகச் சூழலிலும் நன்கு அறியப்பட்டவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து பதிப்புத் துறையில் முழுமையாக ஈடுபட்டு வருபவர்.

இலங்கை வடபுலத்தில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி உரும்பிராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப் பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக் கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்ற பின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் உயர் கல்வியை தொடர்ந்தார்.


கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக் கல்லூரிதான் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப் பல்கலைக் கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்த போது, கணேச லிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் , கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்துள்ள கணேச லிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப் பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகளவு புத்தகங்களை எழுதியிருக்கின்றார்.


இலங்கை அரசின் சாகித்ய அகடமி விருது (நீண்ட பயணம் நாவலுக்கு), தமிழக அரசின் விருது (மரணத்தின் நிழல் நாவலுக்கு) என பல விருதுகள் பெற்றவர்.

அன்னாரின் இழப்பு என்பது ஈழத்து தமிழ் பரப்பிற்கும், தமிழ் பேசும் நல்லுலகிற்கும் பேரிழப்பாகும். நாமும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.