சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை எவ்வாறு கண்டறிவது??

பிள்ளைகளுக்கு பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.

முன்பள்ளி மாணவர்கள்

பத்து முன்பள்ளி மாணவர்களில் ஒருவருக்கு மருத்துவரீதியான பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. மற்றவர்களை விட, இவர்களையே நாம் அதிகம் கவனிக்க வேண்டும். ஏனெனில், அதுதான் கற்கத் தொடங்கும் பருவம். இவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.

அவர்களால் ஓவியம் தீட்ட முடியாது. அவர்களது கவனிக்கும் திறன் குறைந்திருக்கும். உதாரணத்துக்கு, உட்கார்ந்து ஒரு கதை கேட்கக்கூட அவர்களால் இயலாது. பள்ளியில் செயல்திறன் குறைவாக இருக்கும். இவற்றை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம்.பாடசாலை மாணவர்கள்

மூன்று வயதில் பார்வைக்குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்த பிறகு, ஆறு வயதில் மீண்டும் கண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும். இந்த வயதில் ஐந்தில் ஒரு மாணவருக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவர்கள் அடிப்படை கண் சோதனையிலும் கூட தேறிவிடுவார்கள். ஆனால் பார்வைக் குறைபாட்டை உரிய நேரத்தில் கண்டு பிடிக்கவில்லை என்றால், அவர்களது பள்ளிப் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.பார்வைக் குறைபாட்டை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்

 • அடிக்கடி வரும் தலைவலி
 • அதிகப்படியாக கண்களைத் தேய்ப்பது
 • புத்தகம் அல்லது செல்போனை அருகிலோ அல்லது தொலைவிலோ வைத்துப் பயன்படுத்துவது.
 • ஒரு கண்ணை மூடிக்கொண்டு படிப்பது.
 • கண்களைச் சுழற்றுவது
 • வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள்
 • கவனம் செலுத்த இயலாமை
 • திடீரென மதிப்பெண்கள் குறைவது
 • வகுப்பறையில் கரும்பலகையில் உள்ள எழுத்துகளைப் பார்ப்பதில் பிரச்னை.
  இவை அனைத்தும் பார்வைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக இருப்பதால், இந்த செயல்பாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்

 • சிறுவர்களுக்கு பார்வைப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
 • இரண்டு அடிக்கும் குறைவான தூரத்தில் அமர்ந்து டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு மேல் இடைவிடாமல் தொடர்ச்சியாக புத்தகம் படிப்பதையும், அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
 • பிறந்த குழந்தைக்கு கட்டாயம் கண் பரிசோதனையை நாம் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு 6 முதல் 12 மாதத்துக்குள் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று வயது அடையும் போதும், பிறகு பள்ளிப்பருவ வயதிலும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இப்படி குழந்தைப் பருவம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் கண் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை வைத்தே பார்வைக் குறைபாடுகளை கண்டறியலாம். பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் பார்வை தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பிள்ளைகளுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படாமல் நாம் பாதுகாக்கலாம்.


பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் பொதுவான வழிமுறைகள்

கண்களுக்கோ அல்லது பார்வைக்கோ எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும். இதனால், குளூக்கோமா எனும் கண் அழுத்த நோய் போன்ற பார்வை இழப்பு நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும்.

கண்களுக்கு எவ்விதக் கேடும் ஏற்படாதவகையில் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளை நாம் மேற்கொள்ளும் போது, அதற்கான பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.