தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருக்கும் பிள்ளைகளை அதிலிருந்து படிப்படியாக விடுவிக்க வேண்டும்..!

கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருக்கும் பிள்ளைகளை அதிலிருந்து படிப்படியாக விடுவிக்க வேண்டும். பிள்ளைகள் இணைய தளத்தின் மூலம் எவ்வாறான விடயங்களை மேற்கொள்கிறார்கள் என்பது பற்றி பெற்றோர்கள் தேடிப் பார்ப்பது அவசியமென உளவியல் வைத்திய நிபுணர் மகேஷன் கணேஷன் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காலத்தில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றி ஊடகவியலாளர்களைத் தெளிவூட்டும் செயலமர்வு சி.பி.எம். அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் வளவாளராக பற்கேற்றபோதே உளவியல் வைத்திய நிபுணர் மகேஷன் கணேஷன் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு வருட காலமாக தொடர்வதனால் பிள்ளைகள் உளவில் ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். முடக்கநிலை அமுலில் இருந்த காலப்பிரிவில் பாடசாலைகளுக்குச் செல்லாது வீட்டில் இருந்த போது மாணவர்கள் அதிகளவான உளவில் பிரச்சினைகளை எதிர் கொண்டனர்.


பாடசாலைகளில் புத்தகக் கல்வியை மாத்திரமல்லாது சமூகத்தில் ஏனையோருடன் எவ்வாறு பழகுவது என்பதையும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். கொவிட் தொற்று நிலையினால் ஏனையோருடன் இணைந்து செயற்படும் அனுபவம் மாணவர்களுக்குக் குறைவடைந்திருக்கிறது.


குறித்த காலப் பிரிவில் நண்பர்களுடனான தொடர்பு குறைவடைந்ததனால், தொலைபேசி போன்ற உபகரணங்களுக்கு இசைவாக்கம் அடைந்திருக்கிறார்கள். ஆகவே பிள்ளைகள் இணையதளத்தில் எவ்வாறான விடயங்களை மேற்கொள்கிறார்கள் என்பது பற்றி பெற்றோர்கள் தேடிப் பார்க்க வேண்டும்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருக்கும் பிள்ளைகளை அதிலிருந்து படிப்படியாக விடுவித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.