ஆரோக்கியமான சிறுவர்களையும் மரணம் வரை கொண்டு செல்லக் கூடியளவு அபாயமிக்கது டெங்கு..!

டெங்கு நோயானது ஆரோக்கியமான சிறுவர்களைக் கூட மரணம் வரை கொண்டு செல்லக் கூடியளவு அபாயம் மிக்கது. தற்போது டெங்கு நோய் அதிகரித்து வருகின்றமையால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்திய சாலையில் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஹசித லியனாராச்சி தெரிவித்தார்.


சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (24 ) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் சீமாட்டி சிறுவர் வைத்திய சாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் சுமார் 700 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அந்த எண்ணிக்கை குவைடைந்துள்ளது. தற்போது மாதாந்தம் 100 தொடக்கம் 120 கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.


ஆனால் டெங்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது. காரணம் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் டெங்கு நோய்க்கு உள்ளான 250 சிறுவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இம் மாத்ததில் அந்த எண்ணிக்கை 300 ஐ விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். தற்போது சிறுவர்கள் கொவிட் மற்றும் டெங்கு என இரு நோய்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர்.


கொவிட் தொற்றானது தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும். ஆனால் டெங்கு நோய் ஆரோக்கியமான சிறுவர்களையும் மரணம் வரை கொண்டு செல்லக்கூடியது.

எனவே சிறுவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.