எரிபொருள் விலை அதிகரிப்பு; பாடசாலை போக்குவரத்து கட்டணம் உயர்வு..!

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நாளை (03) ஆரம்பமாகவுள்ள புதிய பாடசாலை தவணையிலிருந்து போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணம் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமென அதன் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை நியாயமான விலையில் அதிகரிக்குமாறு தமது சங்க உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைக்கு பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.


பஸ் கட்டணத்தை போன்று புகையிரத கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டுமென புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களம் தொடர்ந்தும் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த நிலையை தவிர்க்கும் வகையில் புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


பஸ் கட்டணத்தைப் போன்று புகையிரதக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டால் இயக்கச் செலவுகள் தீர்க்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.