கல்வியியல் கல்லூரி ஆசிரிய நியமனத்தின் போது பாடசாலைத் தெரிவு இல்லை; இறுதிப் பரீட்சை ஒக்டோபரில்..!

தேசிய கல்வியியல் கல்லூரிகள் 2018 – 2020 இன் கட்டுறுப் பயிற்சி குழுவின் இறுதிப் பரீட்சை வரும் அக்டோபரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சின் கல்வியியல் கல்லூரி பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது,

​​2023 ஆம் ஆண்டு புதிதாக நியமனம் செய்யவுள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களை பிரபல பாடசாலைகளுக்கு நியமிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


வடக்கு மற்றும் கிழக்கில் பாடசாலை அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரகாரம் புதிய ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும், கட்டாயமாக பணிபுரியும் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 5 ஆண்டுகள் கிராமப் புறங்களில் பணிபுரியும் வகையில் இச்சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய ஆசிரிய மாணவர்களை ஆட்சேர்ப்பு விரைவில் செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.