காபூல் பல்கலைக் கழகத்தில் மாணவர்களை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு; 19 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பல்கலைக் கழகமொன்றில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் மேற்கொண்ட மிருகத்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்த பட்சம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக 22 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிய அதிகாரிகள் கூறியுள்ளனர். திங்கட் கிழமை காலை முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எல். மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

அந் நாட்டு நேரப்படி காலை 11 மணியளவில் தற்கொலை குண்டுதாரியொருவர் பல்கலைக் கழக வளாகத்திற்குள் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார்.

அதன் பின்னர் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த இரு துப்பாக்கிதாரிகள் அங்கிருந்தவர்கள் மீது மிருகத்தனமான துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் நூற்றுக் கணக்கான மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த 23 வயதுடைய மாணவன் ஃபிரைடூன் அஹ்மதி,

துப்பாக்கிச் சூடு நடந்த போது நான் வகுப்பில் இருந்தேன், நாங்கள் மிகவும் பயந்தோம், இது எங்கள் வாழ்க்கையில் இறுதி நாளாகவும் இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்.

துப்பாக்கிச் சூட்டின் போது இங்கிருந்தவர்கள் பிரார்த்தனை செய்து, கூச்சலிட்டு ஏனையவர்கள‍ை உதவிக்காக அழைத்ததாகவும் கூறினார்.

மீட்கப்படுவதற்கு முன்பு அஹ்மதியும் ஏனைய மாணவர்களும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முற்றுகை இடப்பட்டனர்

உயர்கல்வி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹமீத் ஒபைடி, வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈரானிய புத்தகக் கண்காட்சியைத் தொடங்க அரசாங்க அதிகாரிகள் வருகையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக கூறினார்.

ஜனாதிபதி அஷ்ரப் கானி இந்த தாக்குதலை “பயங்கரமான பயங்கரவாத செயல்” என்று அழைத்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.

தாக்குதலில் 19 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட மூவருள் ஒருவர் முன்னதாகவே தன்னைத் தானனே வெடிக்கச் செய்தி உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களல் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று காபூல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, காபூல் பல்கலைக் கழக வளாக வாயில்களுக்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டில், காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதம் ஐ.எஸ்.ஐ.எல் போராளிகள் தலைநகரின் ஷியா பெரும்பான்மை புறநகரான டஷ்டே பார்ச்சியில் உள்ள ஒரு கல்வி மையத்தில் தற்கொலை குண்டு வெடிப்பில் 24 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

கட்டார் நாட்டில் அரசாங்கமும் தலிபான் குழுவினரும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வன்முறை சம்பவம் ஆப்கானில் அரங்கேறியுள்ளது.