கல்வி அமைச்சின் செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பம் – கபில பெரேரா

கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் இனங்காணப் பட்டதையடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கல்வி அமைச்சு நாளை வியாழக் கிழமை மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவினால் இன்று புதன் கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

கல்வி அமைச்சின் வளாகத்தில் அமைந்துள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் ஊழியர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று செவ்வாய்க் கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து கிருமி நீக்கல் நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கிருமி நீக்கல் நடவடிக்கைகளின் பின்னர் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைய மீண்டும் கல்வி அமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்தோடு அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் செயற் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

தொற்றாளருடன் தொடர்புகளைப் பேணிய 7 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அண்மையில் கல்வி அமைச்சில் ஊழியர்களின் எண்ணிக்கை வரையறுக்கப் பட்டிருந்தமையால் தொடர்பாளர்களும் குறைந்தளவிலேயே உள்ளனர்.

கல்வி அமைச்சினுள் தற்போது சகல பிரிவுகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. என பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் ஜயம்பதி அமரசேகர தெரிவித்துள்ளார்