மக்களே அவதானம்; இலங்கையின் கிழக்கு பகுதியில் நாளை புயல் தரை தட்டும் சாத்தியம்..!

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் புயலாக மாறி நாளை மாலை கிழக்குக் கரை தரையை தட்டலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை எச்சரித்துள்ளது.

இந்தப் புயல் நாளை மாலை ஐந்து மணிக்குப் பின்னர், முல்லைத்தீவிற்கும் மட்டக்களப்பிற்கும் இடைப்பட்ட பகுதியில் தரை தட்டக்கூடிய சாத்தியம் உள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

இது பற்றி திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்தக் காலநிலையின் விளைவாக நாட்டை சூழவுள்ள கடல் கொந்தளிப்பானதாக மாறலாம். சில மாகாணங்களில் கடும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும், கடற் போக்குவரத்தில் ஈடுபடுவோரும் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து இன்று (டிசம்பர் 01ஆம் திகதி) 1130 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இத் தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை(டிசம்பர் 02ஆம் திகதி) மாலையில் அல்லது இரவில்கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக் கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை இந்தப் புயல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் பட்சத்தில் அதனை சமாளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

இதற்கான ஆயத்தங்களை ஆராயும் விசேட கூடடம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் இடர்காப்பு முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்து கொண்டார்கள்.

நாளை முற்பகல் பதினான்கு பிரதேச செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் உரிய தீர்மானங்கள் எட்டப்படும். இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு வைத்திய சாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட மாட்டாதென மட்டக்களப்ப மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரை மூடப்படவுள்ளன. சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளை மூடுவதெனத் தீர்மானித்ததாக கிழக்கு ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.