கபொத உயர்தர புவியியல் வரைபுகள் – மணிக்கூட்டு வரைபடம்

முட்கடிகாரமொன்றின் (ஒத்திசைவு மணிக்கூடு – Analog Clock) அமைவினை போன்று மையத்திலிருந்து பிரிந்து செல்கின்ற ஆரைகளில் தரவுகளைக் குறித்துக் காட்டுகின்ற வரைபடங்கள் மணிக்கூட்டு வரைபடங்கள் என அழைக்கப்படுகின்றன.

குறிப்பாக வருடத்தின் மாதாந்த ரீதியிலான காலநிலைத் தரவுகளைக் காட்டுவதற்கு இவ்வரைபடம் பொருத்தமாக காணப்படுகிறது. இங்கு தரவுகள் பார்களாகவோ அல்லது புள்ளியிட்டு இணைக்கப்பட்ட கோடுகளாவோ காட்டப்படலாம். பொதுவாக மழைவீழ்ச்சித் தரவுகளை பார்களாவும், வெப்பநிலைத் தரவுகளை புள்ளியிட்டு இணைக்கப்பட்ட கோடுகளாகவும் இவ்வரைபடத்தில் காட்டப்படுகின்றன.

மணிக்கூட்டு வரைபடத்தில் காலநிலைத் தரவுகளைக் காட்டுகின்ற போது 12 மாதங்களுக்குரிய தரவுகளும் 12 ஆரைக்கோடுகளில் காட்டப்படும். அதாவது மணிக்கூட்டினுடைய பிரதான 12 இலக்கங்களும் இங்கு மாதங்களைக் குறிப்பதாக அமைகின்றன. அந்த வகையில் 12 ஆரைக் கோடுகளும் சமமான இடைவெளியில் வரையப்படுகின்றன. அதாவது மொத்த வட்டத்தில் 360 பாகை ஆகையால் 30 பாகை இடைவெளியில் கோடுகள் வரையப்படுகின்றன.

இங்கு யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய காலநிலைத் தரவினை அடிப்படையாகக் கொண்டு ஓர் மணிக்கூட்டு வரைபடம் ஒன்றினை வரைவது தொடர்பான செய்முறைகளை அவதானிப்போம்.
முதலில் மணிக் கூட்டு வரைபடத்திற்குரிய ஆரையை கண்டு அதனை அடிப்படையாகக் கொண்டு பிரதான வட்டமொன்றை வரைந்து கொள்ள வேண்டும். இங்கு இரண்டு தரவுகள் காட்டப்படுவதனால் இரண்டு வகையான தரவுகளையும் காட்டக் கூடிய வகையில் அளவுத்திட்டம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதாவது மழை வீழ்ச்சிக்குரிய அளவுத் திட்டமும், வெப்ப நிலைக்குரிய அளவுத் திட்டமும் ஒரே ஆரையை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படும்.

முதலில் நாம் வரையவிருக்கின்ற மணிக்கூட்டு வரைபடத்தின் ஆரையை 5 சென்ரி மீற்றர்கள் என கருதிக் கொள்வோம். எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு மழைவீழ்ச்சி, வெப்பநிலை ஆகியவற்றிற்குரிய அளவுத்திட்டங்களைக் கணித்துக்கொள்வோம்.

முதலில் மழைவீழ்ச்சிக்குரிய அளவுத்திட்டத்தினை கணித்துக் கொள்வோம். அதிகூடிய மழைவீழ்ச்சி 380 மில்லிமீற்றர்களாகும். ஆகவே 380 மில்லி  மீற்றரினை 5 இனால் (ஆரைநீளம்) வகுக்க வேண்டும். அதன்படி 380/5 = 76 என்றவாறு அளவுத்திட்ட விகிதம் கிடைக்கும். எனவே இதனை நாம் அண்ளவாக 1 சென்ரிமீற்றருக்கு 100 மில்லிமீற்றர்கள் என அளவுத்திட்டமாக எடுத்துக் கொள்ள முடியும்.

அதேபோன்று வெப்பநிலைக்குரிய அளவுத்திட்டத்தையும் கணித்துக் கொள்ள வேண்டும். அதிகூடிய வெப்பநிலையாக 29 பாகை செல்சியசும், அதிகுறைந்த வெப்பநிலையாக 24 பாகை செல்சியசும் காணப்படுகின்றது. எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு 1 சென்ரிமீற்றரினால் 2 பாகை செல்சியசை குறிக்கும்படி அளவுத்திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் 22 பாகையிலிருந்து ஆரம்பித்து 30 பாகை வரையில் வெப்பநிலை காட்டக் கூடியவாறு படம் அமைந்து விடும்.

இங்கு ஆரை 5 சென்ரிமீற்றராகக் கருதி அளவுத்திட்டங்கள் எடுக்கப்பட்டாலும், அதனை விட ஒரு அலகு அதிகரித்தே வட்டத்தினை வரைந்து கொள்ளவேண்டும். ஏனெனில் முதலாவது 1 சென்ரிமீற்றர் வட்டப் பகுதியதானது மத்தியில் வெறுமனே விடப்படுவதனாலேயாகும். எனவே நாம் இங்கு 6 சென்ரிமீற்றரை அடிப்படையாகக் கொண்டு முதலில் வட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு சென்ரி மீற்றர் இடைவெளியில் வட்டத்தினுள்ளே வட்டங்கள் வரைந்து கொள்ளல் வேண்டும்.

வட்டத்தினை வரைந்துகொண்டபின்னர், 30 பாகை இடைவெளி வரக் கூடியவாறு 12 ஆரைக்கோடுகளை வட்டத்தின் மையத்திலிருந்து பிரதான வட்டத்தின் ஆரை நீளம் வரையில் வரைந்து கொள்ள வேண்டும். அதாவது 6 சென்ரிமீற்றர் நீளமுடையதாக 12 கோடுகள் வட்டத்தின் மையத்திலிருந்து வரையப்பட்டிருக்கும்.

மத்தியில் அமைகின்ற 1 சென்ரிமீற்றர் ஆரையுடைய சிறிய வட்டப் பகுதியில் உள்ள ஆரைக்கோடுகளை அழித்து விடவேண்டும். பின்னர் மழை வீழ்ச்சிக்குரிய அளவீடுகளை ஒரு ஆரையிலும், வெப்ப நிலைக்குரிய அளவீடுக்ளை இன்னோர் ஆரையிலும் குறித்துக் கொள்ள வேண்டும்.

தரப்பட்ட தரவுகளில் முதலில் மழைவீழ்ச்சிக்குரிய பார்களை ஒவ்வொன்றாக அளவுத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வரைந்து கொள்ள வேண்டும். அடுத்து வெப்பநிலையினுடைய அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு அதற்குரிய புள்ளிகளைக் குறித்து கோடுகளால் இணைத்துக் கொள்ள வேண்டும்.

படத்தை வரைந்து கொண்ட பின்னர் தலைப்பு, அளவுத் திட்டம், மூலம், விளக்க வாசகம், குறியீட்டு விளக்கம் என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடல் வேண்டும்.