கொரோனா அச்சம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு..!

0
334

கொரோனா தொற்று அச்சம் காரணமாக வடக்கில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட் கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

கொவிட் அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதற்கான அறிவிப்பை மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

கிளிநொச்சியில் தொண்டமான் நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சலை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் கொவிட் தொற்று உள்ளமை நவம்பர் 23 ஆம் திகதி கண்டறியப்பட்டது.

அதனால் அவருக்கு தொற்று ஏற்படக் காரணியாக அமைந்த மற்றும் அவருடன் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நவம்பர் 24 ஆம் திகதி தொடக்கம் தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டது.

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 22ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் டிசெம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு பாடசாலைகள் இடம் பெறவுள்ளன.

இதேவேளை, காரைநகரில் கொவிட் தொற்றுள்ள ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி நவம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டது.

எனினும் ஆசிரியருக்கு கோரோனா தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் காரைநகர் இந்துக் கல்லூரியும் எதிர்வரும் 7ஆம் திகதி தொடக்கம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here