இந்திய ஆந்திர மாநிலத்தில் மர்ம நோய்க்கு குடிநீரின் மாசுபாடே காரணம்; முதல் கட்ட ஆய்வில் தகவல்..!

இந்திய ஆந்திர மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மர்ம நோய்க்கு, குடிநீர் மற்றும் பாலில் காணப்படும் உலோகத் தன்மையே காரணம் என முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஏலூரில் திடீரென ஏற்பட்ட மர்ம நோயால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மத்திய, மாநில மருத்துவ நிறுவன நிபுணர்களும், சுகாதார அதிகாரிகளும் முதல் கட்ட ஆய்வை மேற்கொண்டு, அதன் அறிக்கையை அளித்துள்ளனர்.

அந்த ஆய்வறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் பருகிய குடிநீர், பாலில் காணப்படும் காரீயம், நிக்கல் போன்ற கன உலோகங்கள்தான் பாதிப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, நோயாளிகளின் உடலில் கன உலோகங்களின் தாக்கம் குறித்து முழுமையாக ஆராயவும், சிகிச்சை முறைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அனுப்பிய 3 பேர் குழுவுடன், உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழுவும் நேற்று ஏலூர் சென்று மாதிரிகளை சேகரித்தது.

மர்ம நோய் பாதிப்புக்கான முழுமையான காரணம், மத்திய குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகுதான் தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறினர்.

மர்ம நோயால் இதுவரை 505 பேர் பாதிக்கப்பட்டதில், 370 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 139 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.