வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் நீம் அமைப்பினால் உதவிகள் வழங்கி வைப்பு..!

வெளிச்சம் அறக் கட்டளையிடம் வவுனியா தரணிக்குளம் பாடசாலை சமூகத்தின் கோரிக்கைக்கு அமைய வெளிச்சம் மற்றும் நீம் அமைப்பினால் இன்றைய தினம் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதிப் பங்களிப்பில் பெற்றோரை இழந்து அம்மம்மாவின் அரவணைப்பில் வாழும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும், வறுமைக்கு உட்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 15 தாய்மார்களுக்கு பெறுமதியான சாறிகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு.லம்போதரன், நீம் அமைப்பின் செயலாளரும், முன்னாள் வவுனியா கல்வியற் கல்லூரி பீடாதிபதியுமான திரு. சுவர்ணராஜா சேர் அவர்களும், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தரும், முன்னாள் பிரபல புவியியல் ஆசிரியருமாகிய தமிழினியன் S.S.வாசன் சேர் அவர்களும், பாடசாலையின் அதிபர் திரு.இ.லிங்கநாதன் சேர் அவர்களும், பிரதி அதிபர் திரு. ம.ஜெகதீஸ்வரன் சேர் அவர்களும், பாடசாலையின் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மீள்குடியேற்ற கிராமமான தரணிக்குளம் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான பூரண ஆதரவை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் விரைவில் ஒரு தொகை மாணவர்களுக்கான புத்தகப் பைகளையும் வழங்குவதாக நீம் அமைப்பின் செயலாளரும் முன்னாள் வவுனியா கல்வியற் கல்லூரி பீடாதிபதியுமான திரு.சுவர்ணராஜா சேர் அவர்கள் உறுதியளித்தார். அதேவேளை இப்பிரதேசமானது அவசியமான வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகின்ற கிராமங்களில் ஒன்றாகக் காணப்படுவதுடன் மக்களின் அறிவுப் பசியை போக்கும் பணியை இப் பாடசாலையானது பல்வேறு சவால்களின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றது. எனவே தேவையறிந்து இவ்வாறான உதவிகளை வழங்கும் நீம், வெளிச்சம், என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தினருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.


இதேவேளை பாடசாலைச சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று கடந்த வாரம் தினமும் 6 கிலோ மீற்றர்களுக்கு மேல் நடந்து பாடசாலை வரும் மாணவன் ஒருவனுக்கு வெளிச்சம் அறக்கட்டளை துவிச்சக்கர வண்டி ஒன்றை சமூக ஆர்வலர் ஒருவர் ஊடாக வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.