பிம்ஸ்டெக் அமைப்பும் இலங்கையின் எதிர்காலமும்..!

பிம்ஸ்டெக் (BIMSTEC) என்று அழைக்கப்படும் ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு’ அமைப்பின் செயற்பாடுகள் தெற்காசிய பிராந்தியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.

குறிப்பாக இந்த அமைப்பின் உருவாக்கம் வங்கக்கடலை சூழ உள்ள நாடுகளின் கூட்டு முயற்சியின் ஊடாக, இந்நாடுகளில் கிடைக்கப் பெறும் வளங்களுக்கு ஏற்புடையதான, தாங்கு திறன் கொண்ட, நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தலை மையமாக கொண்டதாகும். இதில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்த அபிவிருத்தி நோக்கிய பண்பை அடிப்படையாகக் கொண்டவை.

இந்த அமைப்பானது, பொருளாதார வளர்ச்சி என்பதனை மையமாக கொண்டு பலசமூக அபிவிருத்தி, அங்கத்துவ நாட்டு அரசுகளின் கட்டமைப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைத்தல், போதைப் பொருட்கடத்தல், ஆட்கடத்தல் நடவடிக்கைகளைத் தடுத்தல் போன்ற பன்முக நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியான்மர் தாய்லாந்து ஆகிய நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன. இந்த நாடுகள் மத்தியில் உள்ள மிக சிறப்பான தன்மை என்னவெனில் இந்தியாவை தவிர ஏனைய நாடுகள் சர்வதேச வல்லரசு போட்டியில் ஈடுபட்டுள்ள சீனாவுடனும் அமெரிக்காவுடனும் இசைவு இராஜதந்திரம் மூலம் தமது நலன்களை அடைய முனையும் நாடுகளாகும்.
ஆனால் இந்த அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் தமது நலன்களை மையமாக கொண்ட நிகழ்ச்சி நிரல் முக்கியத்தவம் பெறுகிறது. தெற்காசிய நாடுகள் மத்தியில் பிரபல்யம் வாய்ந்த சார்க் நாடுகளுக்கும், தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டான ஆசியான் நாடுகளுக்கும் இடைப்பட்ட அரசுகளின் நிறுவனமாகவும் இந்த அமைப்பு சித்தரிக்கப்படுகிறது.

தெற்காசிய நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை தவிர்த்துக் கொண்டு ஆசியான் நாடுகளில் அங்கத்துவம் வகிக்கும் தாய்லாந்து, மியான்மார் ஆகிய கிழக்கு வங்கக் கடற்கரை நாடுகளை இணைத்து அமைக்கப் பட்டிருக்கிறது. இதனாலேயே பிம்ஸ்டெக் அமைப்பு சார்க் மற்றும் ஆசியான் நாடுகளிற்கு இடைப்பட்ட அமைப்பாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய சர்வதேச கடல் வர்த்தகத்தில் வங்கக்கடல் உலகின் உயிர் நாடியாக கணிப்பிடப்படுகிறது. வங்கக்கடலை கட்டுப்படுத்தும் எந்த அமைப்பும் கணிசமான அளவு சர்வதேச வர்த்தக அரசியலில் முக்கியத்துவம் பெறுவனவாக இருக்கமுடியும். வங்கக்கடலை தனது பூரண அதிகாரத்தில் கொண்டு வரும் வகையில் அந்தமான் தீவுகளின் முக்கிய துறைமுக நகரான போட் பிளையரில் பாரிய தளம் அமைக்கும் பணியை இந்தியா முன்னெடுத்துள்ளது.

ஆக வங்கக்கடல் பிராந்தியத்தில் கடற் போக்குவரத்து, அத்துமீறிய மீனவர்களை கட்டுப்படுத்தல், கடற்கொள்ளையரை பிடித்தல், கடற் கலங்களை கண்காணித்தல் போன்ற பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது. அதேபோல வங்கக்கடலையே நேரடியாக நம்பி இருக்கும் மியான்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளும், நாற்புறமும் தரை எல்லைகளால் சூழப்பெற்ற பூட்டான், நேபாளம் போன்ற நாடுகளும் தமது உடனடி கடல் தொடர்புக்கு இந்தியா, பங்களாதேஷ் ஊடாக வங்கக் கடலைச் சார்ந்து உள்ளன.

தாய்லாந்து ஒரு புறத்தில் வங்கக்கடலையும் மறு புறத்தில் தென் சீனக் கடலையும், கொண்டுள்ளது. தாய்வானின் இந்த அமைவிடம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வருடம் பிரேரிக்கப்பட்டு விவாதிக்கபட்டு வரும் தாய்லாந்து கால்வாய் அமைக்கும் திட்டத்தின் மூலம், அதன் முக்கியத்துவம் மேலும் வலுவடைகிறது. மலே குடா நாட்டின் ஊடாக சிங்கப்பூர், மலேசிய, இந்தோனேசிய நாடுகளை தவிர்த்து கால்வாய் அமைத்து கடற்பயணத்தை உருவாக்கும் உபாயத்தை இந்த பிரேரனை கொண்டுள்ளது.

அத்துடன் அந்தமான் கடலிலிருந்து தென் சீனக்கடலை நோக்கி வங்கக்கடல் ஊடாக பயணிக்கும் கப்பல்களுக்கு பயண காலத்தினை குறைந்தது மூன்று நாட்களால் குறைத்து கொள்ள கூடிய வாய்ப்பையும் அமையவுள்ள கால்வாய் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரா கால்வாயென அழைக்கப்படும் 120 கிலோ மீற்றர் நீளமுள்ள கால்வாய்த் திட்டம் அமைப்பதில் சீனக் கடற்கலன்கள் சிங்கப்பூர் வழியாகச் செல்வதை சுருக்கும் என்ற காரணத்தால் சீனாவின் 21ஆம் நூற்றாண்டு கடல் பட்டுப்பாதை திட்டத்தினை மையப்படுத்திய இராஜதந்திர தலையீடுகள் இருக்குமென இந்தியா எதிர்பார்க்கிறது.

பிம்ஸ்டெக் அமைப்பில் இலங்கை ஒரு புறத்தில் அராபிக் கடலை நோக்கிய பொருளாதாரத்தையும் மறுபுறத்தில் வங்ககடலை நோக்கிய பொருளாதாரத்தையும் கொண்ட இரு தெரிவுகளை கொண்டுள்ளது.

இலங்கை சர்வதேச அரசியலில் பூகோள முக்கியத்தவத்தை கொண்டிருந்தாலும் பொருளாதார நிலையில் சீனாவின் முதலீடுகளிலேயே அதிகம் தங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தன்னை உருவாக்கி கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடத்தில் உள்ள அதேவேளை அதன் அருகே இருக்கும் மத்தள விமான நிலையம் இந்திய முகவர்கள் கைக்குச் சென்றுள்ளது. மேற்கு நாடுகளின் புறக்கணிப்பால் சர்வதேச அளவில் உபயோகமற்ற பொருளாதார முதலீடாக இந்த விமான நிலையம் காணப்படுகின்றது. சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையம் விமானங்களைப் பழுது பார்க்கும் நிலையமாகவும் உதிரிப்பாகங்களின் களஞ்சியமாகவுமே பயன்படுத்தப்படுவதாக மொன்ரீரியலில் இயங்கும் சர்வதேச விமான நிலையங்களுக்கான அமையம் அறிவித்திருந்தது.

தென்கிழக்காசிய நாடுகளின் ஆழ்கடல் வியாபாரமும் அது சார்ந்த கைத்தொழில்கள் மூலமும் தமது பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகின்றன. கரையோர உல்லாச பயண வியாபாரம், கப்பல் தள கட்டமைப்பு, மீன்பிடி வியாபாரம் எனப் பலதரப்பட்ட கைதொழில்கள் மூலம் தமது பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகின்றன. இந்த வகையில் இலங்கையும் பல மேலைத்தேய ஆய்வுகளுக்கு அமைய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிய பல அபிவிருத்தி மூலோபாய முனைப்புக்களை செயற்படுத்த எத்தனிக்கிறது.

இதனால் கிழக்கு இலங்கைப் பகுதியை பல சமூக பொறியியல் நடவடிக்கைகள் மூலம் புதிய பாரிய திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறது. ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் சீன, இந்திய மேலைநாட்டு தலையீடுகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிலையே உள்ளது.

இலங்கை மிக விரைவில் உள்நாட்டு நாணய மதிப்பு இழப்பின் காரணமாக கம்போடியா, மாலைதீவு போன்ற நாடுகளை போல அமெரிக்க டொலரை தனது உள்நாட்டு நாணயமாக பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிடம் கையளிக்கப்படும் எந்த ஒரு திட்டமும் வளர்ச்சிப் படிகளை நோக்கியதாக இருக்க மாட்டாது என்பதும் சில ஆய்வாளர்களின் பார்வையாகும்.

ஏனெனில் இந்தியா தனது நாட்டு துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் மட்டுமே அபிவிருத்தியின் பிரதான நோக்கங்களாக கொண்டிருக்கும். அதேபோல சீன முதலீடுகள் இலங்கையை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் நடவடிக்கைகளாகவே இருக்கப் போகின்றன.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையும் நிலையை இலங்கை மிக விரைவில் அடையும் என்பது மேலைதேய பொருளாதார ஆய்வாளர்களின் கணிப்பாகும். கடந்த செப்டெம்பரில் இலங்கையின் தலைமையில் நடைபெறவிருந்து ஐந்தாவது மாநாடு ஒத்தி வைக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.