Home Blog

வாழக் கல்..!

0

Written by Akshayan

பெறுவதற்கரிய மானிடப்பேறு பெற்றுக்கொண்ட நாம் நம் வாழ்வை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ளும் பொருட்டு கல்வி கற்றல் வேண்டும். வாழ்வதற்கான கல்வியை அனைவரும் முயன்று கற்க வேண்டும். கல்வி கரையில்லாதது ஆனால் மனித வாழ்வோ நீர்க்குமிழி போன்று நிலையற்றது: குறுகியது. ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலக அளவு’ என்பதற்கமைய நாம் கற்கவேண்டிய விடயங்கள் அதிகமாக உள்ளன. கல்வி கற்பதற்கு இளமைக் காலமே பொருத்தமெனினும் ஒருவர் இறக்கும்வரை கற்க முடியும்.


மனிதனுள் அமைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி. கல்விமூலம் சூழலை, அறிவை, சமுகத்தை, பண்பாட்டு மரபை ஆராய்ந்து சிறந்தமுறையில் வாழமுடியும். கல்வி ஒரு மனிதனின் நல்வாழ்வுக்குரிய நல்ல நண்பனாகும். ‘கற்க மறுப்பன் வாழமறுப்பவனாகிறான்’, ‘எல்லா அழகும் அழகல்ல கல்வி அழகே அழகு’ என்பதற்கு அமைய ஒருவருக்கு உண்மையான அழகு கல்வியே என்றால் மிகையில்லை.
”கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையவர் கல்லாதவர்”
என்னும் வள்ளுவரின் பொய்யா மொழிக்கேற்ப கற்றோரே கண்ணுடையவர் ஆவார்.

மனிதர்களுக்கு வாழ வழிகாட்டும் கல்வியை
”கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்று கொன்றை வேந்தன் கூறுவதற்கமைய எத்தகைய இடரையும் தாண்டி கற்க வேண்டும். கல்வியினால் மனித நேயம் வளர்கிறது. சக மனிதர்களை மதிக்கவும் நேர்மையுடன் வாழவும் கல்வி உதவுகின்றது.
”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல”
என்பதைப் புரிந்து கொண்டு காலத்தை வெற்றி கொண்டு வாழ்வதற்குரிய கல்வியைக் கற்க வேண்டும்.


கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அக்கல்வியை வாழக்கற்க வேண்டும். இல்லையேல் பிறந்தும் இறந்தவர் போன்றே ஆகிவிடநேரிடும். மக்களின் நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், மக்களின் திறமையும் கல்வி மூலமே வளரும். சூழலுக்கு ஏற்ப சிறந்தமுறையில் நடந்து கொள்ளுவதற்குரிய அறிவையும், அனுபவத்தையும் கல்வி தருகின்றது. ஆகையினால் வாழக் கற்க வேண்டும்.

கல்வியானது வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கங்களைத் தருவதோடு தொழிலுக்கும் வழிகாட்டுகின்றது. காலத்துக்கேற்ற வகையில் சிறந்த தொழிலைப்பெற்று நேர்மையுடனும், மேன்மையுடனும் வாழ்வதற்கு கற்கவேண்டும். வாழ வழிகாட்டும் கல்வியே மனிதர்களின் தெரிவாக அமைய வேண்டும். அத்தகைய கல்வியைக் கற்கும் போது வாழ்வு ஒளிமயமானதாக அமையும் என்பது திண்ணம்.

குறிப்பாக ஒழுக்கக் கல்வியையும் அழகியற் கல்வியையும் கற்பதுபோன்று தொழில்வாண்மைக் கல்வியையும் கற்க வேண்டும். சமுதாய பொருளாதார மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு வாழும் வரை வாழக் கற்க வேண்டும். இல்லையேல் உலகத்தோடு ஒட்டிவாழத் தெரியாதவர்களாகவே இருக்க வேண்டிவரும்.


பல நூல்களைக் கற்றால் மட்டும் போதாது. அதாவது ”ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது”. எனவே அந்நூல்களின் கூறப்பட்டபடி கற்றவர்கள் யதார்த்த வாழ்வைத் தொடர வேண்டும்.

கல்வியினால் குறிப்பிட்ட ஒருவர் மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகமும் நன்மை பெறுகின்றது. ஒருவரின் வாழ்வுக்கு அவர் கற்ற கல்வி வாழ வழிகாட்டும்போது அதனைப் பின்பற்றி பலரும் வாழ முற்படுபவர். இத்தகைய கல்வியே சிறந்ததாகும்.
”ஒருமைக் கண்தான் கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்புடைத்து”
என்பதற்கமைய கல்வியானது ஒருவரோடு அழிந்து போகாது. எனவே அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்க வேண்டும்.

மனிதர்களின் மனிதத் தன்மையோடு பலரும் போற்ற வாழவும், காலமாற்றத்தை வெற்றிகொள்ளவும் வாழக்கற்பது தலையாய கடமையாகும். எனவே கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதைப் புரிந்து எல்லோரும் வாழக் கற்பது சாலச் சிறந்ததாகும்.

தொகுப்பு:
த.மேகராசா(கவிஞர் மேரா)
வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு.

வகுப்பறைக் கற்பித்தல் முறைகள்..!

0

Written by Akshayan
சாதாரணமாக வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடும் போது ஒரு பாட அலகை கற்பிப்பதற்கு மிகச் சிறந்த கற்பித்தல் முறை எதுவென யாரும் சிபார்சு செய்ய முடியாது. ஆசிரியரே படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார். கற்பித்தல் ஓரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். மிகச் சிறந்த கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளல் ஆசிரியரின் கடமையாகும்.


பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின் இயல்பு, பாடஅலகின் தன்மை, பௌதிக சூழலின் தன்மை, பெற்றுக் கொள்ளக் கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் அகிய அனைத்து சாதனங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அந்த வகையில் வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாட அலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும். அந்த வகையில் கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.

1.விரிவுரை முறை கற்பித்தல்
2.குழுமுறைக் கற்பித்தல்
3.வினாவிடை முறைக்கற்பித்தல்
4.கூட்டுமுறைக்கற்பித்தல் – பல்தரக்கற்பித்தல்
5.ஒப்படைமுறைக் கற்பித்தல்
6.கண்டறிமுறைக் கற்பித்தல்
7.படிமுறைக்கற்பித்தல்
8.சிந்தனைக்கிளறல் கற்பித்தல் முறை
9.விளையாட்டு முறைக்கற்பித்தல்
10.பாத்திரமேற்று நடித்தல்
11.நுண்முறைக்கற்பித்தல்
12.போலச்செய்தல் கற்பித்தல் முறை
13.வெளிக்களச் செயற்பாட்டு கற்பித்தல் முறை
14.முன்வைத்தல் முறை
15.வணிக முறை கற்பித்தல்
16.பிரச்சினை திர்த்தல் முறை
17.செய்திட்ட கற்பித்த்ல் முறை
என பல வகை கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான இடத்தில் வகுப்பறை கற்பித்தலில் சரியான முறையை தெரிவு செய்யும் போது கற்றல், கற்பித்தல் சிறப்பாக அமையும்.


1.விரிவுரை முறை கற்பித்தல்- இது பழமையான கற்பித்தல் முறையாகும். ஆசிரியரை முதன்மையாக் கொண்டது. ஆசிரியர் பேச்சு மூலமாக வழங்கும் அம்சங்களை மாணவர் காது கொடுப்பர். சில வேளை குறிப்பெடுத்துக் கொள்வர். எனினும் மாணவரின் பிரதிபலிப்பு ஆசிரியரை சென்றடைவதில்லை. பின்னூட்டல் கிடையாது. கருத்து ஒரே திசைக்கு மட்மே செலுத்தப்படுகிறது. இங்கு மாணவர் தொழிற்பாடு கிடையாது. மாணவர்கள் சுறுசுறுசுப்பு காணப்பட மாட்டாது. ஆர்வமற்ற செவிமடுப்போராக காணப்படுவர்.

2.குழுமுறைக் கற்பித்தல் -இங்கு சமவயதுக் குழுக்கள் காணப்படுவர். மாணவர் மையமே அடிப்படையாக் கொண்டது. மாணவர் உற்சாகமாக செயற்படவர். கண்டாய்ந்தவற்றைக் குழுக்களாக முன்வைப்பர். இங்கு குழுவின் தலைவர் தானாகவே உருவாகுவார். ஆசிரியர் மாணவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குறித்தக் கொண்டு சகல குழுக்கழும் முன்வைத்தலின் பின்னர் ஆசிரியரினால் கருத்துக்களும் வெளிக் கொணரப்படும்.

பின்னர் கணிப்பீடு, மதிப்பீடு இடம் பெறும். எனவே இங்கு வகுப்பறைக் கற்பித்தல் மிகவும் குதூகலமாகவும் சந்தோசமாகவும் காணப்படும். இங்கு 5E –( METHOD) முறை பயன்படுத்தப்படும். முற்றிலும் மாணவர் மையக் கற்பித்தல் மையமாக அமையும்.

3.வினாவிடை முறை கற்பித்தல்- இம் முறை மிகவும் பழமையான கற்பித்தல் முறையாகும். நவின காலத்தல் வினா எழுப்பல் முறை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுகிறது.
4.கூட்டு முறைக் கற்பித்தல் – பல்தரக்கற்பித்தல் – பல ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தீர்க்கமான ஒரு நோக்கத்துடன் திட்டமிட்டு மாணவர் குழுவுக்கு கற்பிக்கும் ஒரு முறையாகும்.

5. பிரச்சினை தீர்த்தல் முறை – பிரச்சினை தீர்த்தல் கற்பித்தல் முறை ஒரு விஞ்ஞான முறையாகும். யோன்டுயி எடுத்துக் காட்டிய பிரச்சினை தீர்க்கும் முறை ஐந்து சந்தர்பங்களைக் கொண்டது. இங்கு மாணவர் பிரச்சினையை எழுப்புதலும், அப்பிரச்சினையை பகுப்பாய்வு செய்தலும் அது தொடர்பான ஏதும் அனுமானங்களை எழுப்புதலும், அந்த அனுமானங்களை பரிசீலனை செய்து பார்த்தலும், ஆதாரஙகளின் அடிப்படையில் தீர்மானத்துக்கு வருதலும் ஆகும்.


6.விளையாட்டு முறை-.பாத்திரமேற்று நடித்தல் – மாணவர்கள் செயற்பாட்டு அனுபவம் திருப்தி பெறுகின்ற கற்பித்தல் முறையாகும். பாத்திரமேற்று நடித்தலின் போது ஓர் உயிர்துடிப்புள்ள பாத்திரத்தை அல்லது சந்தர்பத்தை மாணவர்களால் நடித்துக் காட்டலாகும். எனவே மாணவர் மிகவும் விருப்பத்தோடு செயற்படுவதற்கு இந்த நுட்ப முறை நான்கு உதவுகிறது. விளையாட்டு – பாத்திரமேற்றல்-நாடகம், நாட்டியம்; வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்கள் மகிழ்ச்சி. சுறுசுறுப்பு பாடத்தில் விருப்பு, என்பனவற்றிற்கு மிகவும் உதவுகிறது.

7.சிந்தனைக் கிளறல் கற்பித்தல் முறை – சிந்தனைகளைத் தூண்டல் என்பது பங்குபற்றுகின்றவர்கள் சுதந்திரமாக கருத்து வெளியிடக் கூடிய மகிழ்ச்சி மிக்க கற்பித்தல் முறையாகும். இம்முறையின் பண்புகளாக
1.வகுப்பில் சகலரும் பிரச்சினையைச் சமர்பித்தல்
2.மாணவர்கள் சகலரும் கருத்து வெளியிடுவதற்கு இடமளித்தல்.
3.விடையை பின்னர் மதிப்பீடு செய்தலாகும். சிந்தனை தூண்டல் சுதந்திர வெளிப்பாட்டிற்கு ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் உதவும்.
8.நுண்முறைக் கற்பித்தல் – நுண்ணிய கற்பித்தலில் குறுகிய கால எல்லைக்குள் சிறு குழுவை பயன்படுத்தி ஆசிரியர் ஆற்றலை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தலாகும். பொதுவாக வகுப்பறையில் காணக்கூடிய கஸ்டமான நிலமையை நீக்கி கட்டுப்படுத்தப்பட்ட சந்தர்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆசிரியர் ஆற்றலை விருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

தொகுப்பு
திரு இ.நாகேந்திரன் (BA, PGDE(Merit), PGD in Spical Needs Eud)
ஆசிரியர் – மட்/ககு/செங்கலடி விவேகானந்தா வித்தியாலயம், செங்கலடி.

ஆசிரியர் வகிபாகம்..!

0

கல்வி வழங்கும் நிறுவனங்களின் கடந்த காலங்களில் பரவலாக செயற்பட்டு வந்த ஊடுகடத்தும் பங்களிப்பு ( Transmission role) ,பின்னர் அறிமுகப் படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் பங்களிப்பு (Transaction Role) என்பன, வகுப்பறையில் இப்போது காணப்படுகின்றன.

பாடசாலையை விட்டு வீடு செல்லும் பிள்ளைகளிடத்தில் காணப்படும் சிந்தனைக் கிளறல், சமூகத் திறன்கள் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை கருத்தில் கொள்வதன் மூலம் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்ய வேண்டிய அபிவிருத்தி மாற்றங்களையும் அவை எவ்வாறு செய்யப்படல் வேண்டும் என்பதையும் இனங் காண்பது கடினமன்று.

ஊடு கடத்தும் பங்களிப்பில் கற்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் யாவற்றையும் ஆசிரியர்தான் தெரிந்து கொண்டுள்ளதாக எடுத்துக் கொண்டு, மாணவர்கள் இவ்விடயங்கள் தொடர்பாக ஒன்றுமே அறிந்திராதவர்கள் என கருத்தில் கொண்டு விடய அறிவை மாணவர்களுக்கு செலுத்தும் ஒருவராக ஆசிரியர் மாறியுள்ளார்.

இம் முறையில் ஆசிரியர் விரிவுரையாளர் போலத் தொழிற்படுவதோடு மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்கோ, மாணவர்களின் தனியாள் திறன்கள், சமூகத்திறன்களை விருத்தி செய்வதற்கோ செய்யும் பங்களிப்பு போதுமானதல்ல. இங்கு ஒரு வழித் தொடர்பு மட்டுமே காணப்படும். ஆசிரியர் Transmitter ஆக செயற்படுவார்.


எனவே 3T இல் ஆசிரியர் வகிபாகமானது – கடத்தல் வகிபாகம், பரிமாற்ற வகிபாகம், இவை இரண்டையும் தவிர தற்காலத்துக்குப் பொருத்தமான நிலைமாற்ற வகிபாகத்துக்குச் சென்றுள்ளது. இங்கு தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு பல்வழித் தொடர்புகள் மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது. எனவே 3T இன் இரண்டாம் கட்டமான பரிமாற்ற வகிபாகமானது, ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடுவது கொடுக்கல் வாங்கல் பங்களிப்பின் ஆரம்ப கட்டமாக அமைகின்றது.

இதன் போது ஆசிரியரிடமிருந்து மாணவர்களுக்கும், மாணவர்களிடமிருந்து ஆசிரியருக்கும், கருத்துக்கள் பரிமாற்றப் படுவதோடு அதை தொடர்ந்து மாணவர்-மாணவர் இடைத் தொடர்பும், ஏற்படுத்தப்பட்டு அவர்களிடையிலும் கருத்துப் பரிமாற்றல் நடைபெறுவதோடு அது தர்க்கரீதியான கலந்துரையாடலாக மாறுகிறது. தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், எளிதிலிருந்து சிக்கலானதிற்கும், தூல விடயத்திலிருந்து கருத்துநிலை விடயத்திற்கும், மாணவர்களைக் கொண்டு செல்லும் வகையில் ஆசிரியர் தொடர்ந்து வினாக்களை தொடுப்பதில் ஈடுபடல் வேண்டும். இங்கு ஆசிரியர் ஒரு வசதி செய்து கொடுப்பர் Facilitator ஆக காணப்படுவார்.

ஆசிரியர் வகிபாகமானது ஆசிரிய மையத்திலிருந்து தற்போது பிள்ளை மையத்திற்கு இட்டுச் செல்லப்படுகிறது. தேர்ச்சிமட்டக் கல்வியில் மாணவர் செயற்பாடுகள் வலுவான இடத்தைப் பேறுவதோடு வகுப்பில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் அந்தந்த தேர்ச்சி மட்டங்கள் தொடர்பாக குறைந்தது அண்மிய தேர்ச்சி மட்டங்களையாவது பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர் ஒரு வளவாளராக (Resource Person) ஆக மாறுகிறார்.

கற்றலுக்கு தேவையான உபகரணங்களும் மற்றும் வசதிகளும் கொண்ட சுற்றுச் சூழல் ஒன்றைத் திட்டமிடுதல், மாணவர் கற்கும் விதத்தை அருகில் இருந்து அவதானித்தல், இம் மாணவரது இயலுமை இயலாமை என்பவற்றை இனங் காணுதல் தேவையான முன்னூட்டல், பின்னூட்டல் என்பவற்றை வழங்கல் மூலம் கற்றலை விருத்தி செய்வதோடு வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்கள் கற்கும், கற்பதை தூண்டுவதற்கம் உரியவாறு கற்றல் உபகரணங்களை திட்டமிடுவதும் ஆசிரியரின் அடிப்படை கடமையாகும். இவ்வாறான ஆசிரியர் பங்களிப்பு உருமாற்ற பங்களிப்பு (Transformation) எனப்படும்.

பிள்ளை மையக் கற்பித்தலின் செயற்பாட்டின் முதற்படியில் மாணவர்களை கற்றலுக்கு தயார் செய்வதில் ஈடுபடுத்திக் கொள்வது எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு மாணவர்களை தயார் செய்து கொள்ளும்படி ஈடுபடுத்தும் படி (ENGAGEMENT) எனப்படும்.

இப்படியில் ஆரம்பத்தில் ஆசிரியர் கொடுக்கல் வாங்கல் பங்களிப்பின் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பிப்பார் பின்னர் மாணவர்கள் விடயங்களை நன்கு ஆராய்ந்து செயற்படுவதற்கு தேவையான சாடைகளைக் கொடுக்கும் வகையில் கலந்துரையாடலை விரிவுபடுத்திக் கொள்ளல், இக் கலந்துலையாடலில் கருத்துபரிமாற்றல்கள் பயன்படுத்தக் கூடிய நுட்பங்கள் ஆசிரியரிடம் காணப்படும்.


வினாக்களை முன்வைத்தல், படங்கள், பத்திரிகைகள், விளம்பரங்கள், அறிவித்தல்கள், காட்சிகள், அட்டைகள் போன்ற ஆர்வம் ஊட்டுவனவற்றைப் பயன்படுத்தல் பிரச்சினைகள் புதிர்கள் விடயஆய்வுகள், கலந்துரையாடல், நடித்தல், கவிதைகள், பாடல்கள் செய்து காட்டல், கட்புல செவிப்புல சாதனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் இங்கு அடங்கும். முதலாம் படியான E1- மூன்று நோக்கங்களையும் நிறைவேற்றி கொள்வதை அடிப்படையாக கொண்டது.

*வகுப்பு மாணவர்களின் கவனத்தை ஈர்த்தல்
*தேவையான முன்னறிவை மீட்டி கொள்வதற்கு மாணவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கல்
*செயற்பாட்டின் இரண்டாம் படியில் மாணவரிடம் எதிர்பர்க்கப்படும் ஆய்வு முறையான கண்டு பிடிப்புக்களுக்கு தேவையான ஆரம்ப விடயங்களை வழங்குதல்.

நிலைமாற்ற வகிபாகத்தின் இரண்டாம் படியானது மாணவர்களுக்கு ஆய்வுரீதியான பேறுகளை கண்டு பிடிப்பதற்கு ( EXPLORATION) சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. மாணவர்கள் பெறுபேறுகளை கண்டுபிடிப்பது அதற்கான விசேடமாக தயரிக்கப்பட்ட அறிவறுத்தல் படிவத்தினை அடிப்படையாக கொண்டதாகும். பிரச்சினத்தோடு தொடர்பான பல்வேறு விடயங்களிலும் கூட்டாக செயற்பட்டு ஆராய்ந்து குழுவாக கற்பதற்கு ஏற்ற வகையில் அசிரியர் செயற்பாட்டைத் திட்டமிடல் வேண்டும். வழங்கப்பட்டுள்ள உபகரணங்களையும் மற்றும் வளங்களையும் பயன்டுத்தி தெளிவான விளக்கத்துடன் தர்க்கரீதியான கலந்துரையாடல்களுடன் ஆராய்ந்து பேறுகளை கண்டுபிடிப்பது போன்றன இப்படி முறையில் எதிர்பார்க்கப்படும் முக்கிய பண்புகள் சிலவாகும்.

இவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுதல், சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், ஏனையரின் கருத்துக்களுக்கு செவிமடுத்தல் ஏனயோருக்கு உதவுதல், நேர முகாமைத்துவம், உயர்தரத்துடனான முடிவுப் பொருட்களைப் பெறல், நேர்மை போன்ற அன்றாட வாழ்க்கைக்குத்டதேவையான முக்கிய பண்புகளை விருத்தி செய்து கொள்ளல் என்பன மாணவர்களிடத்தில் விருத்தியாகும்.

மாணவர்கள் கண்டுபிடிப்புக்களில் ஈடுபடும் போது குழுத்தலைவர்களை தெரிவு செய்தல் ஆசிரியர் தவிர்த்துக் கொள்வதோடு தலைவர் குழுவில் இருந்து உருவாவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்த வேண்டும். மறைந்திருக்கும் ஆற்றல்கள் வெளிவருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

செயற்பாட்டின் மூன்றாம்படி குழுக்களின் கண்டுபிடிப்புக்களையும் பேறுகளையும் ஏனைய மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வகுப்பில் சமர்பிக்கப்பதற்கு ஒவ்வொரு குழுவிற்கும் சந்தர்பம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் பேறுகளைச் சமர்பிக்கும் போது அக் குழுவில் ஒவ்வொரு அங்கத்தவரும் அதில் பங்கெடுக்கும் போது அவர்களுக்கு வேலைப் பகிர்வு இருப்பது பயனுடையது. கண்டு பிடிப்புக்களுக்கான விளக்கமளித்தல் (EXPLANATION) இப் படியில் முக்கிய எதிர்பார்பாகும்.


செயற்பாட்டின் மூன்றாம் படியில் குழுக்களின் பேறுகளையும் விளக்கமளிப்பதற்கு (EXPLANATION) மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் பேறுகளை சமர்பிப்பதாயின் அவற்றை மேலும் விருத்தி செய்யும் வகையிலான கருத்துக்களை வழங்குவதற்கு முதலில் அக்குறிப்பிட்ட குழுவின் அங்கத்தவர்களுக்கும், பின்னர் ஏனைய குழுக்களின், அங்கத்தவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும் இது நிறைவேற்றப்படுகிறது.

எவ்வாறாயினும் இறுதியில் பேறுகளைத் தொகுப்பது ஆசிரியரின் பொறுப்பாகும். இதன் போது மாணவர்கள் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாக கொண்ட முக்கிய விடயங்கள் எண்ணக்கருக்கள் கோட்பாடுகள் வசதிகள் போன்றவற்றை உறுதிப்படுதிக் கொள்வது எதர்ப◌ர்க்கப்படுகிறது.

வகுப்பறை கற்றல் கற்பித்தல் செய்கை எதிர்பர்க்கப்ட்ட விதத்தில் வெற்றிகரமாக நடைபெறுகின்றதா என தொடர்ந்து தேடிப்பார்பது இம்முறையின் கீழ் ஆசிரியரது பிரதான கடைமையாகும். இதற்காக கணிப்பீட்டு முறையை பயன்படத்த வேண்டியதோடு இது கற்பித்தல் செய்கையினுள் இடம்பெறுவதற்கு திட்மிட்ட செயற்பாடுகளைத் தயாரிப்பதற்குரிய சந்தர்பத்தை ஆசிரியருக்கு வழங்குகின்றது.

செயற்பாட்டின் இரண்டாம் படியில் மாணவர்கள் விடயங்களை ஆராயும் போது கணிப்பீட்டையும்(Assessment) செயற்பாட்டின் மூன்றாம் படியில் மாணவர்கள் பேறுகளை விளக்கும் போது கணிப்பீட்டோடு சார்ந்த மதீப்பீட்டையும் (Evaluation) நிகழ்த்துவதற்கு ஆசிரியருக்கு ஏற்படுகிறது.

எனவே இன்றைய நவீன காலத்தில் ஆசிரியர் ஒருவரின் வகிபாகமானது ஆசிரிய மையத்திலிருந்து பிள்ளை மையத்திற்கு மாற்றமடைந்துள்ளது.

தொகுப்பு

திரு இ.நாகேந்திரன் (BA, PGDE(Merit), PGD in Special Needs Eud)
ஆசிரியர் – மட் / ககு /செங்கலடி விவேகானந்தா வித்தியாலயம்

பாடசாலை நாட்களை இவ்வாண்டில் 150 ஆக குறைக்க தீர்மானம்..!

0

கல்விப் பொதுத் தராதர உயர்தர , சாதாரணதர பரீட்சைகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட வேண்டிய உயர்தர பரீட்சைகளை ஒக்டோபர் 4 ஆம் திகதியும் , டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய சாதாரண தர பரீட்சைகளை 2022 ஜனவரியிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


கல்வி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இவ் வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை நடைபெறும். அதே போன்று சாதாரண தர பரீட்சைகள் 2022 ஜனவரி இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படும்.

அதேபோல் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ஒரு வருடத்தில் 200 நாட்கள் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உரிய காலத்தில் தேசிய பரீட்சைகள் எதுவும் 2020 ஆம் ஆண்டு இடம் பெறவில்லை.

2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை கடந்த மாதம் இடம் பெற்றது. 2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைளை 150 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021 க்கான சாதாரண தர பரீட்சையினை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்த ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பரீட்சை ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தயாராக போதுமான காலலகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள காலத்தை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

புத்தாண்டை முன்னிட்டு விசேட அரச விடுமுறை தினம் அறிவிப்பு..!

0

தமிழ் – சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் திங்கட் கிழமை 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


பொது நிர்வாக அமைச்சினால் இன்று வெள்ளிக் கிழமை மாலை இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பானது எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளதால் , அன்றைய தினத்திற்கு முதல் நாளான திங்கட் கிழமையை விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொது நிர்வாகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டது..!

0

2021ஆம் ஆண்டு அதாவது இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சையானது இவ்வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிற்போடப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2021 அக்டோபர் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 3ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை 2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி; மதரசா பள்ளி ஆசிரியர்கள் சி.ஐ.டியால் கைது..!

0

புத்தளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்த குற்றச்சாட்டில் ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மதரசா பள்ளி ஆசிரியர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அட்டனி ஜெனரலின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்னவின் வழி காட்டுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்கள பிராந்திய அலுவலகம் திறப்பு..!

0

சர்வதேச வளிமண்டலவியல் தினம் இன்றாகும். இதற்கான தேசிய நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று இடம் பெற்றது.

விசேடமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய வளிமண்டலவியல் திணைக் களத்தின் பிராந்திய அலுவலகம் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


முல்லைத்தீவு கரையோர வீதியில் இந்த அலுவலகம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன், முல்லைத்தீவு இராணுவ படைத் தளபதி, வளிமண்டலவியல் திணைக்கள  பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க மற்றும் வானிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

0

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆபத்து அதிகமுள்ள கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7.0 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இஷினோமாகியில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவில் கட்டடங்கள் கடுமையாக அதிர்ந்துள்ளன. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் எல்லையற்ற இணைய வசதி..!

0

இலங்கையிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் எல்லையற்ற இணைய வசதியை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களுடனும் கடந்த மாதம் இணைய பெகேஜ் தொடர்பான அறிக்கை கோரப்பட்டிருந்தது.


இந்நிலையில், தமக்கு கிடைக்கபெற்ற பெகேஜ் விபரங்களை மீளாய்வு செய்து வருவதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக குறித்த விடயத்தை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


எல்லையற்ற இணைய வசதி தொடர்பான பெகேஜ் மற்றும் கட்டண விபரம் என்பவற்றை தீர்மானித்ததன் பின்னர் ஏப்ரல் முதல் வாரத்தில் இதன் முதல் கட்டத்தை வெளியிட முடியுமானதாக இருக்கும் என தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

CIRCULARS

HOT JOBS

Recent Posts

ADVANCED LEVEL EDUCATION

SECONDARY EDUCATION

PRIMARY EDUCATION

Block title

0FansLike
0SubscribersSubscribe